அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 12.12.2013 ரஜினி பிறந்தநாளில் 'கோச்சடையான்' ரிலீஸ்
by abtamil
எப்போது வரும், எப்போது வரும் என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கோச்சடையான்' படம் அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 12 – ஆம் தேதி ரிலீஸாகிறது.
உலக சினிமாவின் புதிய டெக்னாலஜியான மோசன் கேப்சரில் தயாராகியுள்ள முதல் இந்திய திரைப்படம் தான் ரஜினி நடித்துள்ள 'கோச்சடையான்'.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே 'அவதார்' என்ற ஹாலிவுட் படம் ரிலீஸானது. உலக சினிமா வரலாற்றில் அதிக வசூலை குவித்த அந்தப்படத்தைப் போலவே தற்போது கோச்சடையான் படமும் அதே தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. சுமார் 140 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் இந்தப்படத்தை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா டைரக்ட் செய்துள்ளார்.
இந்தப்படத்தில் முதல்முறையாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஷோபனா, ருக்மணி, ஆதி, நாசர் உட்பட ஒருடஜன் நட்சத்திர பட்டாளம் படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.
இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப்படம் எப்போது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் படத்தின் புரொடக்ஷன் வேலைகள் அதிக நாட்கல எடுத்துக் கொண்டதால் பட ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. ஆனாலும் கண்டிப்பாக இந்த வருடத்துக்குள் 'கோச்சடையான்' படம் ரிலீஸாகி விடும் என்று அதன் தயாரிப்பு தரப்பில் சில மாதங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது.
தற்போது அந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கோச்சடையான் பட நிறுவனம். ஆமாம், படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி விட்டதால் படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12- ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். இந்தப்படம் உலகம் முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.
நவம்பம் மாதம் ஆடியோ ரிலீஸாக உள்ளது. ரஜினி பிறந்த தினமான டிசம்பர் 12ந் தேதி வியாழக்கிழமை படம் ரிலீசாகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட கோச்சடையான் படத்தின் டிரெய்லரை இணையதளங்களில் சுமார் 3.5 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்.
Show commentsOpen link
