Catch of the Congress candidate for Prime Minister. Chidambaram
மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில், மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக அளவில் வாக்களித்து அவர்களுக்கு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 78.48 சதவீதம் கைப்பற்றியுள்ளது.
போட்டியிட்ட 38 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் மாபெரும் மக்கள் ஆதரவு. இலங்கையின் 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கும் மற்றும் அதை மேம்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு அற்புதமான நல்ல வாய்ப்பு என நான் கருதுகிறேன்.
மாகாணங்களில் முழு சுயாட்சி; மாகாணங்களுக்கு அதிகாரப் பங்களிப்பு; தமிழர்களுக்கும், சிறுபான் மையோருக்கும் சம உரிமை மற்றும் சம மதிப்பு; தமிழ் மக்களின் தாயகத்தில் அவர்களுக்குள்ள தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல்;
இலங்கையின் அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய இலட்சியங்களை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நான் நம்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் இலங்கைக் கொள்கையின் அடிப்படை சரியான அடிப்படையே என்பதை நிரூபித்துள்ளது.
சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது வெற்றிப்பாதை தொடர நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

