பா.ஜ.க. அழைப்பு: ரஜினி மவுனம் வாய்ஸ் கொடுக்க தயக்கம்? bjp call actor rajini silence
Tamil NewsToday,
பாரதீய ஜனதா அழைப்பால் ரஜினி தரப்பு அரசியல் களம் மீண்டும் சூடாகியுள்ளது. நரேந்திர மோடியை பிரதமராக்க 'வாய்ஸ்' கொடுப்பாரா என்று அரசியில் வட்டாரம் உன்னிப்பாக கவனிக்கிறது. ரஜினியும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் இருந்த போது நரேந்திர மோடி நேரில் வந்து பார்த்தார். இருவரும் போனிலும் அடிக்கடி பேசிக் கொள்கின்றனர்.
எனவே ரஜினி ஆதரவு கிடைக்கும் என பாரதீய தரப்பினர் நம்புகிறார்கள். ரஜினி ஏற்கனவே பல சந்தர்பங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த சம்பவங்கள் தமிழக அரசியலில் நடந்துள்ளன. 1996 சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். அக்கூட்டணிக்கு வாக்களிக்கும்படியும் மக்களை கேட்டுக் கொண்டார்.
1998 பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ரசிகர்களையும் தேர்தல் களத்தில் இறக்கி வாக்கு சேகரிக்கச் செய்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியை ஆதரித்தார். எனது ஓட்டு பாரதீய ஜனதாவுக்கு என்று வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். பாட்டாளி மக்கள் கட்சியுடன் மோதல் ஏற்பட்ட போது தனி கட்சி துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவை பாரதீய ஜனதா தலைவர்கள் வேண்டி நிற்கிறார்கள். ஆனால் ரஜினி ஆதரவு கொடுக்க தயங்குவதாக நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு மெகா பட்ஜெட்டில் தயாரான கோச்சடையான் படம் ரிலீசுக்கு தயாராகிறது. அந்த படம் மீது தான் ரஜினியின் முழு கவனமும் தற்போது உள்ளது என்கின்றனர்.
அரசியல் முடிவுகள் எடுத்தால் படத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது. கடந்த கால அரசியல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு இப்போது தான் பகையை மறந்து எல்லா தலைவர்களுக்கும் பிடித்தமானவராக ரஜினி மாறியுள்ளார். அந்த உறவை மீண்டும் சிதைக்க ரஜினி விரும்ப மாட்டார் என்றும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர் கூறும் போது, நரேந்திர மோடி பேசினால் ரஜினி மனம் மாறி தங்களுக்கு நிச்சயம் ஆதரவு தருவார் என்றார்.
...
Show commentsOpen link

0 comments:
Post a Comment