Thursday, 12 September 2013

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு? Delhi girl case court sentenced today

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு? Delhi girl case court sentenced today 

 

டெல்லி மாணவி கற்பழிப்பு, கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 4 பேருக்கும் தண்டனையை கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கிறது. அப்போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும்.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் 6 காமுகர்களை கொண்ட கும்பலால் கற்பழித்து, வீசி எறியப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாட்டையே பதற வைத்ததுடன், வெட்கி தலைகுனியவும் வைத்தது.

இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் மற்றும் இளங்குற்றவாளி ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறுவர் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.

முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

11-ந்தேதி தண்டனை குறித்த இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அவர்கள் செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணை காட்ட வழியே இல்லை என்பது போலீஸ் தரப்பு வாதம்.

இருப்பினும் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். தேசப்பிதா மகாத்மா காந்தி, ‘‘ இறைவன் தான் உயிரைக் கொடுக்க முடியும். அந்த இறைவனுக்குத்தான் உயிரை எடுக்கும் உரிமையும் உண்டு’’ என கூறி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

வாழ வேண்டிய வயதில் தனது உயிரை அநியாயமாகப் பறிகொடுத்த அந்த இளம் மாணவியின் குடும்பமும், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ‘‘குற்றவாளிகளை தூக்கில் போடப்பட்டால்தான் இந்த வழக்கில் நீதி கிடைக்கும். எங்கள் ஒரே மகளுக்கு கொடுமை இழைத்தபோது இது சரியா என அவர்கள் சிந்திக்கவில்லையே. அப்படி இருக்கிறபோது அவர்களுக்கு கோர்ட்டு ஏன் கருணை காட்டவேண்டும்?’’ என கேள்வி எழுப்புகின்றனர்.

போலீஸ், குற்றவாளிகள் தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா, இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனை 13-ந்தேதி (இன்று) தெரிவிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று அவர் தனது தண்டனை தீர்ப்பை வெளியிடுவார். அதற்காக குற்றவாளிகள் 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் நீதிபதி மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து தண்டனை தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டால் இந்தியாவில் கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் குற்றவாளிகளாக இந்த 4 பேரும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger