தெண்டுல்கர், கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும்: வாசிம் அக்ரம் விருப்பம் Wasim Akram hopes Sachin will play his farewell Test against Pakistan
Tamil News
புதுடெல்லி, செப். 13- சச்சின் தெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும் என்று வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை மன்னன் 40 வயதான சச்சின் தெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அடுத்து, நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகும் சச்சின் தெண்டுல்கர், 200-வது டெஸ்ட் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய சாதனையை நிகழ்த்திய உடன் ஓய்வு பெறுவார் என்றும், மேலும் சில மாதங்கள் அவர் தொடர்ந்து ஆடக்கூடும் என்றும் யூகங்கள் கிளம்பி வருகின்றன. இதற்கிடையே, ஆண்டின் இறுதியில் மேற்கொள்ள வேண்டிய இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
தென்ஆப்பிரிக்க பயணம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. அதே சமயம் தென்ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு வரவழைத்து 2 டெஸ்ட் கொண்ட குறுகிய கால தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நிலையில் தெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அக்ரம் அளித்த பேட்டி வருமாறு:- சச்சின் தெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக தான் (1989-ம் ஆண்டு) தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் தீவிர மோகம் கொண்ட கொல்கத்தா ரசிகர்களின் முன்னிலையில், அங்குள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இந்த போட்டி (இந்தியா-பாகிஸ்தான்) நடக்க வேண்டும். இது தான் அவருக்கு சிறந்ததொரு பிரிவு உபசாரமாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். மற்ற வீரர்களுக்கு தெண்டுல்கர் முன்மாதிரியாக இருக்கிறார். உலகின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்தியாவில், இந்த நூற்றாண்டில் சிறந்த வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டால் அடுத்த வினாடியே எனது ஓட்டு தெண்டுல்கருக்கு தான் விழும். அவருக்கு எதிராக நான் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். நான் ஓய்வு பெற்ற பிறகும் கூட அவருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வருகிறது. விளையாட்டுடன் அரசியலை கலக்கக்கூடாது. இரு நாட்டு மக்களையும் ஒருங்கிணைக்கும் வலிமை கிரிக்கெட்டுக்கு எப்போதும் உண்டு. இரு நாடுகள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே விரைவில் டெஸ்ட் தொடர் நடக்க வேண்டும் என்ற கனவு நனவாகும் என்று நம்புகிறேன். இவ்வாறு அக்ரம் கூறினார். ...

0 comments:
Post a Comment